25.4.06

ஒரு காதல் கடிதம்

உண்மையைச் சொல்ல ஆசைப்பட்டு
உள்ளத்தில் இருப்பதை உரைத்து விட்டேன்
காலத்தை மறந்து எனை ஏற்பாய் - என்ற
காலைக் கனவினில் தவறுண்டோ?

மரணத்தைக் கூட என் மனம் ஏற்கும் - உன்
மறுப்பை ஏற்காததேன்…
வரம் ஏதும் கிடைக்கும் என்று - இன்னும்
நாசி மூச்சு விடுகிறதேன்?

புண்ணியம் ஏதும் செய்ததில்லை - என்
பாவத்தை நானும் மறக்கவில்லை
காற்றில் கரையும் கற்பூரம் போல்
காலம் நம் கசப்பை கரைக்காதோ?

உறக்கம் என்பதை தொலைத்து விட்டேன்
தொலைந்த உறவை தேடுகிறேன்
முடிந்த வாழ்க்கை முற்றும் போடும் வரை
சிறிய ஆசை சிறகடிப்பதேன்

தயக்கங்கள் இருந்தது உண்மையடி - பல
தவறுகள் இழைத்ததும் உண்மையடி
செய்த குற்றத்தை சீர்படுத்த - ஒரு
சந்தர்ப்பம் எனக்களிப்பாயோ?

என் இதழ்கள் சொல்ல நினைத்ததை
என் இமைகள் சொல்ல நினைத்ததை
என் இதயம் சொல்ல நினைத்ததை
இக் கவிதை சொல்லி விட்டதடி.....

No comments: